சமூகத்தின் தேவைகள் அனைத்தும் நிறைவு செய்யப்படுவதற்க்குப் பலரது உழைப்பு மிகமிக அவசியமானது. தனது தேவைகளைச் சமுதாயத்திடமிருந்து பெற்றுக் கொள்ளும் ஒருவர் அதற்குப் பிரதியாக சமுதாயத்திற்குத் தேவையான உழைப்பை அளிக்க வேண்டும் அல்லது சேவை செய்ய முன்வரவேண்டும்-கோவைராமநாதன்
3 ஜன., 2011
மீனவனின் துயரம்
இந்திய கடலோர காவற்படையின் (Indian Coast Guard - ICG) கிழக்குக் கரைத் தளபதியாக இருந்த தலைமை ஆய்வாளர் ஏ.இராஜசேகர், சென்ற வாரம் தனது பதவிப் பொறுப்பை புதிய தளபதியாக பொறுப்பேற்ற சத்யா பிரகாஷ் சர்மாவிடம் அளித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறிய சில
சிந்திக்க வைத்தவை .
“சிறிலங்க கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படும் தமிழக மீனவர்களுக்கு போதுமான பாதுகாப்பை அளிப்பதில் இந்திய கடலோர காவற்படை உறுதியாகவுள்ளது. இது குறித்து அரசிடம் பேசியுள்ளோம்” என்று ஏ.இராஜசேகர் கூறியுள்ளார். இது பல பத்திரிக்கைகளில் செய்தியாக வந்துள்ளது.
தமிழக கடலோரம் மட்டுமின்றி, மேற்கு வங்கம் வரை நீளும் இந்தியாவின் கிழக்குக் கரை முழுவதையும் பாதுகாக்கும் பொறுப்பில் இருந்த கடலோர காவற்படையின் தலைமை ஆய்வாளராக இருந்தவர், தமிழக மீனவர்கள் சிறிலங்க கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுவது குறித்து கவலைப்படுவது ஏன்? என்று புரியவில்லை. இந்தியாவின் கடலோர பாதுகாப்புடன் இணைந்ததல்லவா நமது நாட்டு மீனவர்களின் பாதுகாப்பும்? அவ்வாறு இருக்கையில் தமிழக மீனவர்களை காப்பாற்ற முடியாமல் போனது ஏன்?
சமீபத்தில் கூட, ஒரு மாதத்திற்கு முன்னர், செய்தியாளர்களிடம் பேசிய இராஜசேகர், அப்போதும் தமிழக மீனவர்கள் மீது சிறிலங்க கடற்படையினர் நடத்திவரும் தாக்குதல் குறித்துப் பேசினார். அதுகுறித்து சிறிலங்க கடற்படையிடம் பேசப்போவதாகவும் கூட கூறினார். அதுவும் எல்லா பத்திரிக்கைகளிலும் செய்தியாக வெளியானது. ஆயினும் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் நிற்கவில்லை!
தமிழ்நாட்டின் முதலமைச்சர் கருணாநிதி, பிரதமருக்கு கடிதம் எழுதியிருப்பதாக கூறுவாரே, அதேபோல், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது பற்றி அரசிடம் பேசியுள்ளோம் என்று இராஜசேகர் கூறியுள்ளார். அவர் கூறியுள்ளது மத்திய அரசிடம்தான் என்று புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், அரசிடம் பேசிய பிறகும் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் தொடருகிறதே எப்படி?
தமிழகத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான கடற்பகுதியை பாதுகாக்க மூன்று கடலோர காவற்படை கப்பல்களும் (இந்த கப்பல்களில் நீண்ட தூரம் தாக்கக் கூடிய பீரங்கி உள்ளிட்ட பல ஆயுதங்கள் உள்ளன), இந்திய கப்பற்படையின் ஒரு கப்பலும், இரண்டு ஹெலிகாப்டர்களும், 4 டார்னியர் விமானங்களும் உள்ளன. ஆயினும் மிகச் சாதாரண கண்காணிப்புப் படகுகளில் வரும் சிறிலங்க கடற்படையினர் தமிழக மீனவர்களை தாக்கிவிட்டுத் திரும்புகின்றனர். இப்படிப்பட்ட தாக்குதல்கள் நடைபெற்ற ஒரு முறை கூட, அங்கு இந்திய கடலோர காவற்படை வந்தததாக ஒரு மீனவர் கூட சொல்லவில்லையே!
அப்படியானால், தமிழக மீனவர்களை காக்கும் பணியில் இந்திய கடலோர காவற்படை ஈடுபட வேண்டும் என்று மத்திய அரசு எந்த உத்தரவும் போடவில்லை என்றுதானே பொருள்?
அதுமட்டுமல்ல, இந்திய கடற்பகுதிக்கு மீன் பிடிக்க வந்த சிங்கள மீனவர்களின் 113 விசைப்படகுகளையும், மீனவர்கள் 589 பேரையும் கைது செய்துள்ளதாகவும் கூறுகிறார். இத்தனை பேர் இந்திய எல்லைக்குள் வந்து மீன் பிடித்தும் அவர்களில் ஒருவரையும் இந்திய கடலோர காவற்படை சுடவில்லையே? எல்லோரையும் கைது செய்து பத்திரமாக கரைக்கு கொண்டு வந்து பிறகு படகுகளையும், மீனவர்களையும் மிக பத்திரமாக சிறிலங்க அரசிடம் ஒப்படைத்துள்ளீர்கள். ஆனால், தமிழக மீனவர்கள் கச்சத் தீவிற்கு அருகே, நமது எல்லைக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது கூட, சிங்கள கடற்படையினரால் தாக்கப்படுகின்றனரே. அது எப்படி? இந்திய மீனவர்களைத் தாக்கினால் இந்தியாவின் கடலோர காவற்படை திருப்பித் தாக்கும் என்ற அச்சம் சிறிலங்க கடற்படையினருக்கு இல்லையே எதனால்?
அப்படியானால், இந்திய அரசின், அதன் கடலோர காவற்படையின் இரகசிய ஒப்புதலோடுதான் தமிழ்நாட்டு மீனவர்கள் சிறிலங்க கடற்படையினரால் தாக்கப்டுகின்றனர் என்று ஏன் எடுத்துக்கொள்ளக் கூடாது?
இந்தியாவின் பாதுகாப்புத் துறை செயலர் பிரதீப் குமார் நேற்று முன் தினம் கொழும்புவில், சிறிலங்க பாதுகாப்புத் துறை செயலர் கோத்தபய ராஜபக்சவுடன் பேச்சுவார்த்தை நடத்திய நாளில்தானே இராமேஸ்வரம் மீனவர்கள் மீது சிறிலங்க கடற்படையினர் தாக்குதல் நடத்தினர்? இதன் பொருள் என்ன?
இந்தியாவிற்கும் (அதாவது தமிழ்நாட்டிற்கும்) இலங்கைக்கும் இடையிலான கடற்பரப்பை இணைந்து கண்காணிப்பது தொடர்பாகவே அவர்கள் பேசினார்கள் என்று அதிகாரப்பூர்வமாக சிறிலங்க அரசு செய்தி தருகிறது. ஆனால், அதே நேரத்தில் தமிழக மீனவர்கள் மீது சிறிலங்க கடற்படை தாக்குதல் நடத்துகிறது! அப்படியானால் அவர்களின் அஜெண்டாவில் தமிழக மீனவனின் பாதுகாப்பு இல்லை என்பதுதானே பொருள்.
அதுதான் உண்மை. தமிழக மீனவன் மட்டுமல்ல, தமிழ் ஈழத்து மீனவனும் மீன் பிடிக்காமல் செய்ய வேண்டும். இதுதான் இரு நாடுகளுக்கும் இடையிலான இரகசிய ஒப்பந்தம். அதனால்தான், எல்லை மீறி வந்து மீன் பிடிக்கும் சிங்கள மீனவன் பாதுகாப்பாக கைது செய்யப்பட்டு, பிறகு படகுடன் பத்திரமாக சிறிலங்க அரசிடம் ஒப்படைக்கப்படுகிறான். ஆனால், கச்சத் தீவிற்கு அருகே, இந்தியாவின் எல்லைப் பகுதிக்குள்ளேயே மீன் பிடிக்கும் தமிழக மீனவன் சிங்கள கடற்படையினரால் தாக்கப்படுகிறான். அவன் பிடித்து வைத்த மீன்களும், இறாலும் பறிக்கப்படுகிறது அல்லது கடலில் கொட்டப்படுகிறது. படகுகள் சேதப்படுத்தப்படுகின்றன.
இந்த நிலைதான் 1983ஆம் ஆண்டிலிருந்து 2010 வரை மாற்றமின்றி நீடிக்கிறது. இதுவரை 500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 2,000 மேற்பட்ட மீனவர்கள் காயப்படுத்தப்பட்டுள்ளனர். ஆனால் மத்திய அரசு கேட்கவில்லை.
அதனைப் பொறுத்தவரை தமிழக மீனவர்கள் இந்தியர்கள் இல்லையோ?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக